Student Project Scheme 2021

அனைவருக்கும் வணக்கம்!

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ்மொழி, உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழியாகும். உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. ’தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சர்வதேச அளவில் தமிழ் ஆய்வுகளுக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிக்கும் ஒன்றாகும். மேலும், சர்வதேச ஆய்வுச் சூழலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலை சிறந்த Scopus மற்றும் Web of Science தரவு தளங்களில் இதுவரை நாற்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்த கலை, இலக்கிய மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகள் தரவுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை நமது தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்ற எந்த ஆய்வுகளும் தரவுப் படுத்தப்படவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டே நமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (E-ISSN: 2582-1113) தொடங்கப்பட்டது.

நமது சா்வதேசத் தமிழ் ஆய்விதழ், இந்தியாவின் முதல் Google scholar, cross reference indexed மற்றும் DOI எண் பதிவுபெற்ற தமிழ் ஆய்விதழாகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாகவும், இக்கொரானா தீநுண்மி பெருந்தொற்றுக் காலத்திலும் ஆய்வாளர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஆய்வறிவை விரிவுகொள்ளச் செய்யும் நோக்கிலும் நூற்றுக்கும் அதிகமான மெய்நிகர் கருத்தரங்குகளையும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளையும் தொடர்ந்து (Online webinars and Faculty development programs) நடத்திக் கொண்டிருக்கின்ற இதழாகவும் இருந்து வருகின்றது.

அத்துடன் தமிழாய்வுகளை உலகத்தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் ஆய்வுப்புல வல்லுநர்களின் மதிப்பீட்டைப்பெற்று தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுதல், அவற்றை உலகளாவிய பயன்பாட்டிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏற்றவகையில் எண்ணிமப்படுத்துதல் (digitalize), முதலிய பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. மேலும் பன்னாட்டு தமிழறிஞர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் ஆய்வுவளர்ச்சிக்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், ஆய்வாளர்களுக்கும், ஆய்வுப்புல அறிஞர்களுக்குமிடையே ஆய்வுசார்ந்து உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான வாய்ப்புகளையும், அதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தருதல், தமிழ்ச்சூழலில் இதுவரையிலான ஆய்வுப்போக்குகளையும் அவற்றின் போதாமைகளையும் மதிப்பிட்டு, புதிய களங்களில் புதிய அணுகுமுறைகளில் ஆய்வுசெய்ய ஆய்வாளர்களை ஊக்குவித்தல், ஆய்வுத்திறன் மேம்பட்ட செழுமைமிக்கதொரு ஆய்வாளச்சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு ஆய்வுச் செயல்பாடுகளில் அதிகஅக்கறையோடு முன்னிற்கின்றது. அத்துடன் ஆய்வாளர்களின் ஆய்வுச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக ஆய்வாளர்களுக்கு குறுந்திட்ட ஆய்வுப்பணிகளுக்கு நிதிகளை நல்கியுள்ளது. தற்பொழுது இதன் தொடர்சியாக தமிழ்மொழி மற்றும் இலக்கியக் கல்வியை ஊக்கப்படுத்தவும், தமிழ் மாணவர்களிடையே தமிழாய்வறிவு சார்ந்த உணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதியிலான சிறு உதவியாகவும் இளங்கலை தமிழ் மற்றும் முதுகலை தமிழ் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆய்வு நிதியாக (Rs. 5000.00) வழங்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்விண்ணப்பத்தினை நிறைவு செய்து funding@irjt.iorpress.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30th September 2021

முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 10th October 2021